சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 824 இளைஞர்கள் தேர்வு செய்யதுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், கடந்த டிசம்பர் 2023 முதல் தற்பொழுது வரையிலான காலத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு 675 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கு 65 நபர்களும், கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 29 நபர்களும், வனத்துறையின் கீழ் வனத்தொழில் பழகுநர் பதவிக்கு 10 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுதி 5இல் அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு 45 நபர்களும் மொத்தம் 824 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஜல்ஜீவன் திட்டத்தில் மோசடி செய்ததாக ஊராட்சிமன்றத் தலைவர் மீது வழக்கு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!