சென்னை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில், செயற்குழுவின் துணை பொதுச் செயலாளர் தே.முருகன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது, “தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அமைப்பின் சார்பில், அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
கடந்த 2023-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் மீது உடனடியாக ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிட்டோஜாக் சார்பில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாகப் பங்கேற்கும்.
மேலும், மூன்று நாட்கள் நடைபெறும் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். டிட்டோஜாக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 234 அரசாணையை முழுமையாக ரத்து செய்க.. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் அறிவிப்பு!