சேலம்: மாணவர்கள் என்ற பெயரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகமே ஆசிரியர்கள் மீது எழுதும் மொட்டை கடிதத்தின் மீது பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்துவதாகக் கூறி, ஆசிரியர்களை அவமானம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் பல்கலைக் கழக நிர்வாகமே மொட்டையாக பெயர், ஊர், விலாசம் மற்றும் கையெழுத்து ஏதும் இல்லாமல், ஆசிரியர்கள் மீது புகார் கடிதம் எழுதி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வருவதாக ஆசிரியர் சங்கத்திற்கு தகவல்கள் வருகின்றன.
அதனை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, உயர்கல்வித்துறைக்கு அனுப்பி, பின்னர் உயர்கல்வித்துறை அதனை பல்கலை நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை கோருகிறது. இது போன்ற சூழலில், பல்கலைக்கழகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது மற்றும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது என தொடர் கதையாகியுள்ளது.
மேலும், ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகிகள் பற்றி தமிழக அரசுக்கு புகார் அளித்தால், பல்கலையின் பொறுப்பு பதிவாளர் அந்த புகார் ஆதாரமற்றது, உண்மைக்கு மாறானது என்று எந்த வித விசாரணையையும் நடத்தாமல் அரசுக்கு தவறான தகவல்களை அளித்து கோப்புகளை மூடும் வகையிலும், அந்த புகார் நீர்த்துப் போகும் வகையிலும் அரசுக்கு தகவல்களை அனுப்புகிறார்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கெடுபிடி; முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு சிக்கல்!
ஆகவே, இது தொடர்பாக எந்த விசாரணையையும் பல்கலை நிர்வாகம் நடத்தாமல் ஆசிரியர் மீது எழுதும் மொட்டை கடிதத்தின் மீது விசாரணை நடத்தும் போர்வையில் ஆசிரியர்களை அவமானப் படுத்துவது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேரடியாக முறையிட உள்ளது.
அதற்காக வரும் 3ஆம் தேதி கல்வியியல் துறை ஆசிரியர்களை விசாரணைக்கு அழைத்திருப்பதாக ஆசிரியர் சங்கம் கருதுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனி இது போல் மிரட்டும் வகையில் விசாரணை நடைபெற்றால் அரசின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் பல்கலைக் கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்