டெல்லி : இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணிப்பிக்க மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்து இந்திய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் (மார்ச்.9) நிறைவடைந்த நிலையில் 16ஆம் தேதி வரை நீடித்து தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
மார்ச் 16ஆம் தேதி இரவு 10:50 மணி வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 5ஆம் தேதி 2 மணி முதல் 5:20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்கள் மற்றும் நாட்டை தாண்டி 14 இடங்களில் ஆப்லைன் முறையிலும் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் வழியில் பூர்த்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 25 லட்சத்தை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 4 லட்சத்து 20 ஆயிரம் கூடுதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் ஏறத்தாழ 13 லட்சம் மாணவிகள் இதுவரை விண்ணப்பித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் எம்.பி.பி.எஸ் சீட்டுகளும், 26 ஆயிரம் பல் மருத்துவ இடங்களும், அதுதவிர யுனானி, ஹோமியோபதி, கால்நடை, ஆயுர்வேதம், செவிலியர் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
ஏறத்தாழ 3 மணி 20 நிமிடங்கள் நடைபெறும் இந்த தேர்வில் இரு பிரிவுகளாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! என்ஐஏ வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சி!