சென்னை ஐஐடி (IIT Madras) மற்றும் பிரான்ஸ் நாட்டின் டூர்ஸ் பல்கலைக்கழகம் (University of Tours) இணைந்து "உயர்மதிப்புள்ள பைட்டோகெமிக்கல்களின் நிலையான உயிரி உற்பத்தி" தொடர்பான சிறப்பு படிப்பை அறிவித்துள்ளது.
இது சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் Global Initiative of Academic Networks (GIAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த படிப்பு, உயிரி உற்பத்தி (Biomanufacturing) துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காகவும், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அடையவும் உதவுகிறது.
இந்த படிப்பு, சமீபத்தில் ஒன்றிய அரசு அறிவித்த "BioE3" கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை, உயர் செயல்திறன் கொண்ட பயோ உற்பத்தியை ஊக்குவித்து, பெருமளவில் நிலையான உயிரி உற்பத்தி செய்ய முனைப்பு காட்டுகிறது. பைட்டோகெமிக்கல்கள் என்ற உயர்மதிப்புள்ள தாவர சார்ந்த வேதிப்பொருள்களை, தாவர மற்றும் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
படிப்பின் சிறப்பம்சங்கள்:
இந்த படிப்பை ஐஐடி மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம், பயோபிராசஸ் இன்ஜினியரிங் (Bio Process Engineering) மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் (BTech, MTech, MSc, PhD) உள்ள மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, தாவர மற்றும் நுண்ணுயிர் தொழில்நுட்பம், நொதித்தல் தொடர்பான அடிப்படை அறிவு ஆகியன அவசியமான அறிவாகப் பார்க்கப்படுகிறது.
படிப்பின் தேவை மற்றும் பயன்பாடு:
மக்கள் மத்தியில் பைட்டோகெமிக்கல்களுக்கான மொத்த தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், இயற்கையைப் பாதுகாத்து, சந்தையின் தேவையை பூர்த்திசெய்யவதற்காக இந்தப் படிப்பின் முக்கியத்துவம் உயர்ந்துள்ளது. இதில் சேருபவர்கள் தாவரங்களில் இருந்து மருந்து மற்றும் அழகுசாதன பொருள்கள் போன்ற பைட்டோகெமிக்கல்களை தயாரிக்கப் பயன்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அறிந்து கொள்வார்கள்.
விண்ணப்ப செயல்முறை:
இது ஒரு குறுகியகாலப் படிப்பு என்பதால், 30 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் நேரில் பங்கேற்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர விரும்புவோர் நவம்பர் 22-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பாடநெறி டிசம்பர் 2 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம்:
ஐஐடி சென்னை உயிரி அறிவியல்துறை பேராசிரியர் மற்றும் Bioincubator நிர்வாகியான ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா,, “இந்தியாவில் இயற்கைத் தாவர அடிப்படையிலான பொருள்களுக்கு, குறிப்பாக பைட்டோகெமிக்கல்களுக்கு உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளில் அதிகமான தேவை உள்ளது. இதனை சர்வதேச அளவில் மையமாக்குவதற்கு திறன் மேம்பாடு, புதுமை, தொழில்முனைவு ஆகிய மூன்றும் அவசியம்,” என்று தெரிவித்தார்.
தடையற்ற மற்றும் நவீன உயிரி தொழில்நுட்பங்களை உருவாக்க, இந்தக் படிப்பு ஆர்வம் உடைய ஆராய்ச்சியாளர்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.