சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் இடையே விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு ஒரு கல்வி ஆண்டுக்கு 5 மாணவர்கள் என விளையாட்டு துறையை சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
விளையாட்டு துறையில் சிறப்பாக இருப்பது உடலை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமல்லாது வெற்றி, தோல்வி என இரண்டையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடிய மன முதிர்ச்சியையும் கொடுக்கும்.
மாணவர்கள் மத்தியில் பல மாணவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இப்போது இருக்கக்கூடிய மாணவர்கள் அதிகமாக வெளியில் விளையாடுவது கிடையாது. பெற்றோர்கள் மாணவர்களை விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு மாணவருக்கும் படைப்பாற்றல் மிகவும் முக்கியம். குறிப்பாக பொறியியல் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் படைப்பாற்றல் இன்றியமையாததாக இருக்கிறது. இசை, நடனம், ஓவியம் என கலை மற்றும் கலாச்சார துறையில் இருக்கும் மாணவர்களுக்கு அதிக படைப்பாற்றல் இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவிலேயே எந்த ஐஐடி நிறுவனமும் செய்யாத ஒரு புதுமையான விஷயத்தைச் சென்னை ஐஐடி செய்யவிருக்கிறது.
இசை, நடனம், ஓவியம், புகைப்படம் எடுத்தல் என எந்த வகையான நுண்கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கியிருந்தாலும் அந்த மாணவர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை (Culture Excellence Admission) அமைத்து சென்னை ஐஐடியில் பி.டெக்., பி.எஸ்., படிப்புகளில் உள்ள 16 பாடப்பிரிவுகளிலும் சேரக்கூடிய ஒரு புதுமையை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக சென்னை ஐஐடியில் வழங்கப்படும் 16 துறைகளில் ஒரு துறைக்கு இரண்டு மாணவர்கள் என கலை மற்றும் கலாச்சார பிரிவு மாணவர்கள் சேரலாம். அதில் ஒரு இடம் பெண் பிள்ளைகளுக்கான பிரத்யேக இடமாகவும் மற்றொரு இடம் பொது அதாவது இரு பாலினத்தவரும் சேரக்கூடிய இடமாகவும் இருக்கும்.
தேவையான தகுதிகள் என்ன? இந்த இடங்களை மாணவர்கள் பெற வேண்டுமென்றால் அவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏதாவது ஒரு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல கலை மற்றும் கலாச்சார பிரிவில் மாணவர்களுக்கான அங்கீகாரமாக மத்திய அரசு வழங்கும் துறை சார்ந்த விருதுகளில் அந்த மாணவர் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம்பிடிப்பது, மத்திய அரசு வழங்கும் 9 விருதுகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால் அந்த மாணவர் அவரது கலை மற்றும் கலாச்சார விருப்பத்தை செய்து கொண்டே ஐஐடியில் பொறியியல் படிப்பை படிக்க முடியும்.
இதையும் படிங்க:மருத்துவ உலகையே ஆச்சரியப்பட வைத்த சென்னை ஐஐடி.. மனித மூளையில் துல்லியமான ஆராய்ச்சி!
விண்ணப்பிப்பது எப்படி? இதற்கான விண்ணப்ப பதிவு 2025 ஜூன் 2 ஆம் தேதி துவங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி ஜூன் 18 ஆம் தேதி மாணவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு சான்றிதழ் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர் ஜேஇஇ (அட்வான்ஸ்) 2025-க்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- 2025 ஜேஇ (அட்வான்ஸ்) பொதுவான தரவரிசைப் பட்டியலில் (Common Rank List – CRL) அல்லது பிரிவுவாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- தரவரிசைப் பட்டியலில் உள்ள நிலை, தரவரிசைப் பட்டியல்கள் தயாரிக்கப்படும் எந்தப் பிரிவிலும் இருக்கலாம். இதன் மூலம் இடஒதுக்கீட்டுப் பயன்கள் பாதிக்கப்படாமலும், அதே நேரத்தில் கல்வித் தேவை நீர்த்துப் போகாமலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
- விண்ணப்பதாரர் ஐஐடி-க்களுக்கான தகுதி அளவுகோலின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
- விண்ணப்பதாரர்கள் நுண்கலை மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் வகையில் ஏதேனும் ஒன்றில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கத் தொடங்குவதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் https://jeeadv.iitm.ac.in/face. என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொண்டு தயாராக வைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களின் நுண்கலை மற்றும் கலாச்சாரத் துறையில் தனிச்சிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்படும்.
- பல்வேறு நுண்கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்/ விருதுகள், கல்வி உதவித்தொகை ஆகியவற்றில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பிரத்யேக ஃபேஸ் தரவரிசைப் பட்டியல் (FACE Ranka List -FRL) தயாரிக்கப்படும்.
- பிரதம மந்திரி ராஷ்ரிய பால் புஷ்கர், தேசிய பால் ஸ்ரீ ஹானர், தேசிய இளைஞர் விருது உள்ளிட்ட 9 வகையான பிரிவில் விருதுகளை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று காமகோடி கூறினார்.