ஹைதராபாத்: ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் குடும்ப நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன. கடைசியாக 2011-12ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2017-2018 காலக்கட்டத்தில் தரவுத் தரச் சிக்கல் காரணமாக ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
குடும்ப செலவின கணக்கெடுப்பு: இந்த நிலையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ், தேசிய புள்ளியல் அலுவலகம் (NSSO - National Sample Survey Office) கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை (HCES - Household Consumption Expenditure Survey) நடத்தியது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறம், நகர்புறம், சமூக மற்றும் பொருளாதாரம் வாரியாக தனிநபர் மாதாந்திர குடும்ப செலவினம் கண்டறியும் நோக்கில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள்: இந்த ஆய்விற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 8 ஆயிரத்து 723 கிராமங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 14 குடும்பங்கள் மற்றும் 6 ஆயிரத்து 114 நகர்புறப் பகுதிகளில் வசிக்கும் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 732 குடும்பங்கள் என மொத்தம் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 746 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஆய்வின் முடிவுகளை தேசிய புள்ளியல் அலுவலகம் நேற்று முன்தினம் (பிப்.24) வெளியிட்டது.
இரு மடங்கு அதிகரிப்பு: ஆய்வின் படி, கடந்த 2011-12ஆம் ஆண்டில், இந்திய நகர்புறங்களில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு 2 ஆயிரத்து 630 ரூபாயாக இருந்தது, 2022-23ஆம் ஆண்டில், 6 ஆயிரத்து 459 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே வேளையில், இந்திய கிராமப்புறங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டில் ஆயிரத்து 430 ரூபாயாக இருந்த தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு, 2022-23ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.
செலவினம் குறைவான, அதிகமான மாநிலங்கள்: இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில மக்களின் குடும்ப செலவினங்களை ஒப்பிட்டு பார்க்கையில், அதிக செலவினம் உள்ள மாநிலமாக சிக்கிம் உள்ளது. இங்கு நகர்புறங்களில் 12 ஆயிரத்து 105 ரூபாயும், கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 731 ரூபாயும் செலவிடப்படுகிறது. அதேபோல் குறைந்த செலவினம் உள்ள மாநிலமாக சத்தீஸ்கர் உள்ளது. இங்கு நகர்புறங்களில் 4 ஆயிரத்து 483 ரூபாயும், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்து 466 ரூபாயும் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் மாதாந்திர செலவு: அதேபோல் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் சராசரி மாதாந்திர செலவு 5 ஆயிரத்து 310 ரூபாயாகவும், நகர்புறங்களில் 7 ஆயிரத்து 630 ரூபாயாகவும் உள்ளது. சமூக நலத்திட்டங்கள் மூலம் அரசு வழங்கும், பரிசுத்தொகுப்பு, அரிசி, கோதுமை, பருப்பு, உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்புகளையும் இந்த ஆய்வு விளக்கியுள்ளது.
மேற்கூறிய இலவசப் பொருட்களின் மதிப்போடு சேர்த்து மாதாந்திர குடும்ப செலவினம், நகர்புறங்களில் 2011-2012 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 630 ரூபாயாக இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 521 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல் கிராமப்புறங்களில் 2011-12ஆம் ஆண்டில் ஆயிரத்து 430 ரூபாயாக இருந்த செலவினம் 2022-23ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 860 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சமூகம் மற்றும் பொருளாதார வாரியாக செலவினம்: பொருளாதார வகுப்புகள் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், கிராமப்புறங்களில் உள்ள விளிம்பு நிலை ஏழைக்குடும்பங்களின் மாதாந்திர செலவு ஆயிரத்து 371 ரூபாயாகவும், நகர்புறங்களில் 2 ஆயிரத்து 1 என்பதும் தெரிய வந்துள்ளது.
முதல்நிலை பணக்காரர்கள் என்று பார்த்தோமேயானால் அவர்களின் மாதாந்திர செலவு கிராமப்புறங்களில் 10 ஆயிரத்து 501 ரூபாயாகவும், நகர்புறங்களில் 20 ஆயிரத்து 824 ரூபாயாகவும் உள்ளது. சமூகம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், பழங்குடியினரின் மாதாந்திர குடும்ப செலவு கிராமப்புறங்களில் 3 ஆயிரத்து 16 ரூபாயாகவும், நகர்புறங்களில் 5 ஆயிரத்து 414 ரூபாயாகவும் உள்ளது.
உணவிற்கான செலவினம்: மேலும், சராசரி உணவு செலவுகள் மட்டும் கிராமப்புறங்களில் ஆயிரத்து 750 ரூபாயாகவும், நகர்புறங்களில் 2 ஆயிரத்து 530 ரூபாயாகவும், உணவு அல்லாத மற்ற செலவுகள் கிராமப்புறங்களில் 2 ஆயிரத்து 23 ரூபாயாகவும், நகர்புறங்களில் 3 ஆயிரத்து 929 ரூபாயாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு: 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!