மும்பை: பிரபல ஹரன் ரிப்போர்ட் 2024 (Hurun 2024 report) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆசியாவிலேயே அதிக பணக்காரர்களை கொண்ட நகரமாக மும்பை தேர்வாகி உள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங் முன்னதாக இந்த வரிசையில் முதலிடத்தில் இருந்த நிலையில் அதை பின்னுக்குத் தள்ளி மும்பை தற்போது முதலிடத்தை கைப்பற்றி உள்ளது.
உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை 3வது இடத்தை பிடித்து உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உள்ளது. நியூயார்க்கில் மொத்தம் 119 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது இடத்தில் 97 கோடீஸ்வரர்களுடன் பிரிட்டனின் லண்டன் உள்ளது.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் நகரம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் மும்பை உள்ளது. மும்பையில் மொத்தம் 92 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா தலைநகர் பீஜிங் 91 கோடீஸ்வரர்களுடன் 4வது இடத்திற்கு இறங்கி உள்ளது. கடந்த ஓராண்டில் மும்பையில் மட்டும் புதிதாக 26 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்து உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை நகரின் வளமானது கடந்த ஒரு ஆண்டில் 47 சதவீதம் அதிகரித்து 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சீனா தலைநகர் பீஜிங்கில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 28 சதவீதம் வரை குறைந்து 265 பில்லியன் டாலராக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடார், சீரம் இன்ஸ்ட்டியூட் தலைவர் சைரஸ் பூனவாலா திலீப் சங்வி, குமார் மங்கலம் பிர்லா, ராதாகிருஷ்ணன் தமனி ஆகியோர் ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை உருவாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்த அசூர வளர்ச்சியின் மூலம் இந்திய பொருளாதார கொள்கைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்து உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தொழில்துறைக்கு உகந்த கொள்கைகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக இந்திய தொழில்துறை அசூர வளர்ச்சி கண்டு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு! டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை! - Delhi Excise Policy Scam