ஸ்ரீநகர் : ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் வங்கியில் ஏறத்தாழ 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளன. அதேபோல் அந்த வங்கியின் டிஜிட்டல் வழித்தடங்களில் மட்டும் ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனைகளை நடந்து சாதனை படைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கிக் குவித்ததன் எதிரொலிப்பே இந்த வரலாறு காணாத அளவிலான பணப் பரிவர்த்தனைகள் என வங்கி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை சேனல் எம்பே (mpay) மூலமாக மட்டும் ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு நாட்கள் பொது விடுமுறையையும் சேர்த்து கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 லட்சத்து 93 ஆயிரத்து 598 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் மூலம் 3 ஆயிரத்து 230 கோடியே 77 லட்ச ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ரம்ஜான் பண்டிகை காலத்தில் மட்டும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 82 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக ஜம்மு காஷ்மீர் வங்கி தெரிவித்து உள்ளது. முந்தைய ஆண்டுகளை போல் இல்லாமல், அதிலும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில், பயனர்கள் எந்த வித சிரமமும் இன்றி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள டிஜிட்டல் தளத்தை மேம்படுத்தியதே இந்த மைல்கல்லை எட்ட உதவியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : பேடிஎம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரிந்தர் சாவ்லா ராஜினாமா! என்ன காரணம்? - Paytm MD And CEO Resign