டெல்லி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இதில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. பல்வேறு தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில், பாஜகவுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் அமையவில்லை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை காட்டிலும் பாஜகவுக்கு குறைவான இடங்களே கிடைத்துள்ள நிலையில், அதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தையில் அதிரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் சரிவை எதிர்கொண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 4 ஆயிரத்து 131 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 337 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஆயிரத்து 263 தொகுதிகள் சரிந்து 22 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. இதனால் பங்குச்சந்தையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் திடீர் சரிவை எதிர்கொண்டுள்ளன.
குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதானி போர்ட்ஸ் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் அதானி எனர்ஜி 19.80 சதவீதமும், அதானி பவர் 19.76 சதவீதமும் பங்கு மதிப்பை இழந்து வர்த்தமாகி வருகிறது, மேலும் அம்புஜா சிமென்ட்ஸ் 19.20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
அதேபோல் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 18.55 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 18.31 சதவீதமும் குறைந்து வர்த்தமாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி கடந்த திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியது முதலே அதானி நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலைக்கு வர்த்தகமாகி வந்தது.
குறிப்பாக அதானி பவர் நிறுவன பங்குகள் 16 சதவீதம் வரை வளர்ச்சியை கண்டது. மேலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயாக காணப்பட்டது. மேலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி கிரீன் ஆகிய நிறுவன பங்குகள் கணிசமாக விலை உயர்ந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் அதானி நிறுவன பங்குகள் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
இதையும் படிங்க: கர்நாடகாவில் நிலவரம் என்ன? சிட்டிங் காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக! வாக்குகள் மாறியது எப்படி? - Karnataka Election Results 2024 LIVE