டெல்லி: கடந்த ஆண்டு தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வடமாநிலங்களை சேர்ந்த குழுவினர் தமிழகம் விரைந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விசாரணை நடத்தினர்.
அதேநேரம் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யாப் என்பவரை கைது செய்தனர். சில நாட்கள் தலைமறைவாக இருந்த மணீஷ் காஷ்யாப்பை பீகாரில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தமிழகம் கொண்டு வரப்பட்ட மணீஷ் காஷ்யாப் மதுரையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மற்றொரு வழக்கு விசாரணை தொடர்பாகா மணீஷ் காஷ்யாப் மீண்டும் பீகார் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2023ஆம அண்டு டிசம்பர் மாதம் மணீஷ் காஷ்யாப் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மணீஷ் காஷ்யாப் பாஜகவில் இணைந்து உள்ளார்.
டெல்லி எம்.பி மனோஜ் திவாரி முன்னிலையில் மணீஷ் காஷ்யாப் பாஜகவில் இணைந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், எம்பி மனோஜ் திவாரியுடன் பீகாரில் இருந்து நேற்று டெல்லி வந்ததாகவும், தான் சிறையில் இருந்து வெளியே வர பாஜக எம்பி மனோஜ் திவாரி தான் காரணமாக இருந்ததாகவும் கூறினார்.
அதனால் தான் பாஜகவில் தான் இணைந்ததாகவும், தனது தாய் நரேந்திர மோடியின் தீவிர ரசிகை என்றும் மணீஷ் காஷ்யாப் தெரிவித்தார். தன் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் தற்போது தனக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாகவும், தன் மீதான அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுள்ளன, தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழும் விடுவிக்கப்பட்டுள்ளேன் என்றும் மணீஷ் காஷ்யாப் கூறினார்.
மேலும், பீகார் மாநிலத்தில் பாஜகவின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் லாலு குடும்பம் பீகாரை கொள்ளையடித்து அழித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சனாதன தர்மத்தை யார் இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று மணீஷ் காஷ்யாப் கூறினார்.
இதையும் படிங்க : தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் மதவெறுப்பு பேச்சு.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்! - Lok Sabha Election 2024