புதுடெல்லி: பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான வீடுகளை இடிக்கும் திட்டம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்கிறது.
உத்தரபிரதேசத்தில் குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வீடு உள்ளிட்ட சொத்துகளை இடிக்கும் நடவடிக்கையில் அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அனுமதியின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கக்கூடாது என்று கூறப்பட்டது. புல்டோசர் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு விதிமுறைகள் வகுப்பது குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதி கடந்த 13ஆம் தேதியன்று துர்கா பூஜை ஊர்வலத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 87 பேரை உபி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உபி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி ஆர் கவாய், கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி யூ சிங், "வன்முறையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான கட்டுமானங்களை சட்டவிரோதம் எனக் கூறி மாநில அரசு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறது,"என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : உபியில் மீண்டும் புல்டோசர் அரசியல்.. ஆயுத சப்ளையர் வீடு இடித்து தரைமட்டம்..
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கவாய்,புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை சுட்டிக்காட்டினார். மேலும், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நீங்கள்(மாநில அரசு) மீறும் தவறான முடிவை எடுக்க விரும்புகிறார்களா. அப்படியெனில் அது அவர்கள் விருப்பம்," என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உபி மாநில அரசு வழக்கறிஞர் கே எம் நடராஜிடம், "புதன் கிழமை வரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது,"என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் நடராஜ், "மாநில அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது," என்று உறுதி அளித்தார்.
அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், இது குறித்த வழக்கு ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றம் 15 நாட்கள் நோட்டீஸ் அளித்திருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞரிடம், "சாலையில் வீடு கட்டப்பட்டிருந்தால் அதனை அகற்றுவதில் நீதிமன்றம் தலையிடாது,"என நீதிபதி கவாய் கூறினார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர், "சாலையில் வீடு கட்டப்படவில்லை கிராம பகுதியில்தான் கட்டப்பட்டுள்ளது,"என்றார். இதையடுத்து இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22735067_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்