ஆந்திரா: ஆந்திராவில் 2024 பொதுத்தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இத்தேர்தலில் என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு 21 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காக்கிநாடா பிட்டாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல ஜனசேனா போட்டியிட்ட இரு நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் ஜனசேனா கட்சிக்கு ஒரு சீட்டாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒதுக்கப்படவில்லை.
இந்த சூழலில் வரும் 12-ஆம் தேதி ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைத்து சந்திரபாபு நாய்டு முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். துணை முதல்வர் பதவிக்கு பவன் கல்யாண் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மோடி கேபினேட் 3.0: தென்னிந்திய அமைச்சர்களின் முழு லிஸ்ட்!
ஆனால், ஆந்திர அமைச்சரவையில் ஜனசேனாவை சேர்ப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சியின் வெற்றி என்டிஏ கூட்டணிக்கு பக்க பலமாக அமைந்துள்ள நிலையில் மாநில அமைச்சரவையிலாவது ஜனசேனா கட்சிக்கு இடம் கிடைக்குமா? பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் அங்கீகாரம் கிட்டுமா என்ற கேள்வி ஆந்திர அரசியலில் பரவலாக எழுந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக ஆகிய என்டிஏ கூட்டணி 164 சட்டமன்ற தொகுதிகளையும் 21 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 சட்டமன்ற தொகுதிகளையும், 4 நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற்று தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்!