டெல்லி: 18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (ஜுலை.1) கூடிய நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்த்த மக்கள் மீது திட்டமிட்ட மற்றும் முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் எங்களில் பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம் என்றும் தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இன்னும் சில தலைவர்கள் அரசியலமைப்பின் மீதான தாக்குதலை தட்டிக் கேட்டதன் காரணமாக இன்னும் சிறையில் உள்ளனர் என்றார். அதிகாரம் மற்றும் சொத்து குவிப்பு, ஏழைகள் மற்றும் தலித்துகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை எதிர்த்த அனைவரும் நசுக்கப்பட்டதாக ராகுல் காந்தி பேசினார்.
மத்திய அரசு மற்றும் பிரதமரின் உத்தரவால் தானும் தாக்கப்பட்டதாகவும் அதில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அமலாக்கத்துறையின் 55 மணி நேர விசாரணை என்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார். அபயமுத்திரை என்பது காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் அதன் அர்த்தம் தைரியத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும் என்றும் அந்த சைகை நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் பிரதிபலிப்பு மற்றும் பயத்தை நீக்குகிறது என்றார்.
தைரியத்தை குறித்து இந்து மதம் மட்டுமின்றி இஸ்லாம், சீக்கியம், பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் பிற மதங்களில் கூறப்பட்டுள்ளதாவும், அதன் மூலம் தெய்வீக பாதுகாப்பையும் பேரின்பத்தையும் பெற முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார். அனைத்து மதத் தலைவர்களும் அகிம்சை மற்றும் தைரியத்தை குறித்து பேசியதாகவும், ஆனால், தங்களை இந்து என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுவதாகவும் நீங்கள் உண்மையான இந்துக்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும், நரேந்திர மோடி முழு இந்து சமுதாயம் அல்ல, பாஜக முழு இந்து சமூகம் அல்ல, ஆர்எஸ்எஸ் முழு இந்து சமூகம் அல்ல, இது பாஜகவின் ஒப்பந்தம் அல்ல" என்றும் ராகுல் காந்தி கூறினார். மேலும் பிரதமர் மோடி முன்னிலையில் தன்னை வாழ்த்துவதற்கு அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதனால் அவையில் கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்பட்டது. ராகுல் காந்தியின் பேச்சை கண்டித்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், எந்த மதத்தோடும் வன்முறையை இணைத்து பேசுவது முற்றிலும் தவறானது என்று கூறினார்.
மேலும், இந்து என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்கள் தங்களை பெருமைமிகு இந்து என்று எண்ணிக் கொண்டு இருப்பதை ராகுல் காந்தி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அமித் ஷா கூறினார்.
எந்தவொரு மதத்தையும் வன்முறையுடன் இணைத்து பேசுவது தவறானது என்றும் அதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டத்தில் எங்கு முதல் வழக்குப்பதிவு- அமித் ஷா விளக்கம்! - First case under new criminal laws