டெல்லி: 18வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றம் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்யும் மிகப் பெரிய பொறுப்புக் கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவர். அப்படி எதிர்க்கட்சித தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அரசின் திட்டங்கள், கொள்கைகள் தவறாக இருந்தால் அதை விமர்சித்து முதல் குரல் கொடுப்பவர் எதிர்க்கட்சித் தலைவர். அது அவரது கடமையும் கூட. மக்களவை எதிர்க்கட்சியின் தலைவர் என்பது கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்தை கொண்ட பொறுப்பாகும். மக்களவையில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்.
உதாரணத்திற்கு பொதுக் கணக்கு குழு, பொதுத் துறை நிறுவனங்கள் சார்ந்த குழுக்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக்ககள் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுவார். மேலும் சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், லோக் பால் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கம் வகிப்பார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு என தனி வீடு ஒதுக்கப்படும் அதில் அவர் தனது குடும்பத்தினருடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார். மேலும் அந்த குடியிருப்பின் பராமாரிப்பு, வாடகை உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் அவர் பணம் செலுத்த வேண்டியதில்லை. எம்பிக்களை காட்டிலும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியம் என்பது அதிகம்.
கேபினட் அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சவுகரியங்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும். எதிர்க்கட்சித் தலைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆளுங்கட்சி மக்களவை கூட்டத் தொடரை நடத்தவோ, புதிய மசோதாக்கள் மற்றும் கூட்டுக் குழுக்களின் தலைவர்களை நியமிக்கவோ முடியாது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ராகுல் காந்திக்கு மாத 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஊதியம், கேபினட் அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது செட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மூன்று நபர் குழுவில் ஒரு அங்கமாய் ராகுல் காந்தி நீடிப்பார்.