ஸ்ரீ நகர்: ஜம்மு - ஸ்ரீ நகர் நெடுஞ்சாலை போக்குவரத்து இன்று (மார்ச் 9) இரவு 10 மணி முதல் நாளை 12 மணி வரை நிறுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு இடிபாடுகள் காரணமாக, ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால், இன்று இரவு 10 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் போக்குவரத்து ஒரு வழியாக மட்டும் (One Way) அனுமதிக்கப்பட உள்ளதாகவும், எதிர் திசையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 1 மணி வரை இலகுரக வாகனங்களும், அதனைத் தொடர்ந்து கனரக வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது, “இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் பிஐயு ரம்பனிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள், பயணிகள், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுத்தத்தின்போது, நஷ்ரி முதல் பனிஹால் வரை சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 300 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை, நிலத்தால் சூழப்பட்ட பள்ளத்தாக்கிற்கு உயிர் நாடியாகும். ஏனெனில், இந்த சாலை வழியாகத்தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: பிரிவு 370 ரத்து குறித்து விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?