சண்டிகர்: பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜிமானா செய்துள்ளார். ஏற்கனவே அம்மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த எம்பி பிரிஜேந்திர சிங் அண்மையில் காங்கிரஸ் இணைந்த நிலையில் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் சூழ்ந்துள்ளது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்னல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில் நாடு முழுவதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இருக்காது என்பதைப் போல், ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்.
இங்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்தியத் தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களிலும் வென்று இருந்தது. இது தவிர 7 சுயேச்சை சட்டப் பேரவை உறுப்பினர்களும் வென்று உள்ளனர்.
இங்குப் பெரும்பான்மை நிரூபிக்க 46 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பதால் 40 எம்.எல்.ஏக்களை கொண்டு இருந்த பாஜக - ஜேஜேபிவுடன் கை கோர்த்து ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சி (JJP), தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(NDA) இருந்து வெளியேறவும், மாநில பாஜக அரசிற்கு வழங்கி வரும் ஆதரவைத் திரும்பப் பெறமுடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்தான் ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்த அவரது தலைமையிலான மொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி பாஜக எம்பியாக இருந்த பிரிஜேந்திர சிங், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனால் ஹரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்து இருப்பது பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: "நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்" அரசிதழில் அறிவித்த மத்திய அரசு! அடுத்து என்ன நடவடிக்கை?