டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதனிடையே, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ (RTI) மூலம் வெளியான தகவலைத் தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்த கச்சத்தீவை, 1961-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒரு குட்டித்தீவுக்கு ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? அதற்கு அவசியமில்லை எனக் கூறி இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியதாக, ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம், பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், '1961ல் நேரு, இந்த தீவு தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'கச்சத்தீவு என்ற சிறிய தீவுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை. எங்களது கோரிக்கையை விட்டுக்கொடுக்க எவ்விதமான தயக்கமும் எனக்கு இல்லை.
இது போன்ற விஷயங்கள் நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பதும், பல முறை இதற்காகக் கேள்விகள் எழுப்புவதும் எனக்குப் பிடிக்கவில்லை' என நேரு பேசியதாக ஆர்டிஐ தகவலில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எனவே நேருவுக்கு, இது ஒரு குட்டித் தீவு மட்டுமே. அதற்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை; அவர் அதை ஒரு தொல்லையாகப் பார்த்தார். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. இதே பார்வையில் தான் இந்திரா காந்தியும் இருந்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், 1974-ல் முன்னாள் பிரதமர்களாகிய ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவருமே இந்தியா - இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தின் போது, கச்சத்தீவை ஒரு 'சிறிய தீவு' மற்றும் 'சிறிய பாறை' என்றே அலட்சியமாக அழைத்ததாக ஆர்டிஐ தகவலில் வெளியான தகவல் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தேர்தலின் போது, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் மீன்பிடிப்பதில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது என்பன உள்ளிட்டவற்றைத் தேர்தல் பிரச்சாரமாகக் கையில் எடுப்பது வழக்கம். அந்தவகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே நடந்தது என்ன? - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கம் - Kachchatheevu Issue