டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு 4வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே.13) நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்க்குபதிவு தொடங்கிய மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். இந்நிலையில், 4வது கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் ஏறத்தாழ 63.04 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.02 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தில் 68.20 சதவீத வாக்குகளும், பீகாரில்- 55.92 சதவீதமும், ஜம்மு மற்றும் காஷ்மீரில்- 36.88 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில்- 64.30 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில்- 69.16 சதவீதமும், மகாராஷ்டிராவில்- 52.93 சதவீதமும், ஒடிசாவில்- 64.23 சதவீதமும், தெலுங்கானா மாநிலத்தில்- 61.59 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில்- 58.02 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் மக்களவை தேர்தலை தொடர்ந்து 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இன்று (மே.13) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அங்கு 79.90 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒடிசா மாநிலத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (மே.13) வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 64.23 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பெட்டிகளுக்கு வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் முடிவில் ஒட்டுமொத்தமாக 66.71 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த மே 7ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மும்பை ராட்சத இரும்பு பில் போர்டு விழுந்ததில் 4 பேர் பலி! 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்! வீடியோ வைரல்! - Mumbai Bill Board Collapse