டெல்லி: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது அரசியல் வாரிசு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் கேபினட் அமைச்சருமான விகே பாண்டியனா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக், விகே பாண்டியன் குறித்து மிகைப்படுத்தி வெளியிடப்படும் கருத்துகளை தன்னால் புரிந்து கொள்ளவில்லை என்றார்.
மேலும், விகே பாண்டியன் குறித்து பரவும் மிகைப்படுத்தல் மற்றும் போலியான செய்திகள் மற்றும் கருத்துகளை தான் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், சட்டப் பேரவை தேர்தலில் கூட பாண்டியன் போட்டியிடாத நிலையில் இந்த கேள்விகள் எங்கிருந்து எழுப்பப்படுகின்றன என்று தெரியவில்லை என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
தனது அரசியல் வாரிசு விகே பாண்டியன் அல்ல என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார். மேலும், தனக்கு பின் ஒடிசா மக்களின் வருங்கால தலைவரை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்றும் நவீன் பட்நாயக் கூறினார். ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் விகே பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், இது அபத்தமானது, ஏற்கனவே இந்த விவகாரத்தில் தான் பல முறை விளக்கமளித்துவிட்டதாக கூறினார்.
மேலும், இந்த குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மை இல்லை என்றும் விகே பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சிலர் கூறுகிறார்கள், அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்தார். நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக அதிருப்தி அலை வீசிவரும் நிலையில் அதன் காரணமாக விரக்தியடைந்த பாஜகவினர் இது போல பேசி வருவதாக நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
முன்னதாக பிரசாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உடல் நலன் குறித்த சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். அதற்கு முன் ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா என ஒடியா மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொதுக் கூட்டங்களில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியை நீக்கி விட்டு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 147 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் வரும் ஜூன் 1ஆம் தேதி 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 6 மக்களவை தொகுதிகளுக்கும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 7வது கட்ட மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மக்கள் யார் பக்கம்? - Lok Sabha Election 2024