கோயம்புத்தூர்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை கோயிலில் பாஜக சார்பாகச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோயில் முன்பு ஒரு வாகனத்திலிருந்து ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலை எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அனுமதியின்றி சாலையோரத்தில் வாகனத்திலிருந்து நேரலை காட்சிகளை ஒளிபரப்ப காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "540 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். இது இந்திய நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இதற்கான எத்தனையோ லட்சம் பேர் போராட்டம் செய்து தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர்.
இந்த நாட்டை பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். அவர்கள் இந்து மதத்தையும், வழிபாட்டுத் தலங்களைச் சீரழிக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சனாதன தர்மம் மீண்டும் ஒரு முறை தனது சக்தியை நிலைநாட்டிய உள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. இந்த கோயில் இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளம். இக்கோயில் கட்ட அரசு செலவழிக்காமல், மக்கள் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜை, அன்னதானம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது. நாட்டில் விரும்பும் தெய்வத்தை வழிபட அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை மறுக்கப்படுகிறது. நாங்கள் பொய் சொன்னதாகத் தமிழக அரசு கூறுகிறது,ஆனால் பொய் பரப்புவது தமிழக அரசு தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒருபக்கம் காவல் துறையை வைத்து அரசு மிரட்டல் விடுக்கிறது. முகலாயர் ஆட்சி, ஒளரங்கசீப் ஆட்சி அல்ல வரி கட்டினால் தான் கோயிலுக்குச் செல்ல முடியும் என்ற நிலையைத் திரும்பக் கொண்டு வர முயற்சி செய்கிறது.
மக்களின் பக்தி உணர்வை அடக்க நினைத்தால், தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்களின் பக்தி உணர்வைத் திராவிட மாடல் அரசால் நிறுத்தி விட முடியாது, தமிழகம் ராமர் உடன் தொடர்புடைய மாநிலம்.ராம நாமம் தி.மு.க.வுக்கு பதிலடி தரும்.
கோவையில் நேரலையை ஒளிபரப்பக் கூடாது என காவல் துறையினர் கோயில் நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள். காவல் துறை அதிகாரி ஒருமையில் பேசி மிரட்டுகிறார். காவல் துறையினர் வழக்குப் போட்டால், அதனைச் சந்திக்கத் தயார். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் சிறப்புப் பூஜை உள்ளிட்டவை செய்யக்கூடாது என அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது.தமிழக அரசு மக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமர் கோயிலைக் கட்டி, பொங்கலைக் கொண்டாடினால் தமிழர்களின் ஓட்டு விழுமா? இது பெரியார் மண் - மு.க.ஸ்டாலின் பேச்சு