டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆம் ஆத்மி கட்சி ஆக்கிரமிப்பு செய்து கட்சி அலுவலகம் நடத்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
டெல்லி நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் ஆம் ஆத்மி, கட்சி அலுவலகம் நடத்த நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக விண்ணப்பத்தைச் செயல்படுத்தி அதன் முடிவை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் கோருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் கட்சி அலுவலகத்தை தொடர்ந்து செயல்படுத்த ஆம் ஆத்மிக்கு உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வளாகத்தை காலி செய்ய ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாகவும், அதன்பின் நீதித்துறையின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த ஒதுக்கப்பட்ட நிலம் விரைவான அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக ரோஸ் அவென்யூவில் உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆம் ஆத்மி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறு டெல்லி அரசு மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "லஞ்சம் உரிமை அல்ல" - எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!