பல விதமானப் பறவைகள் சிறகடித்து பறப்பதைக் காண உத்தரகாண்ட் மாநில அரசு, சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறது. எழில் கொஞ்சும் சூழலில், மாநிலம் முழுவதிலும் 15 இடங்களை இதற்காக அரசு தேர்வு செய்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு முதல் அரிய வகை வெளிநாட்டு பறவைகளை பார்வையாளர்கள் பார்த்து மகிழலாம்.
சுற்றுலா பயணிகளையும் இதனால் அதிகம் கவர முடியும் என்பதால், முதன்முறையாக பறவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பறவைகளை இயற்கையுடன் இணைந்து காண்பதற்கான அரிய வாய்ப்பை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. பறவைகளைக் காண்பதற்கான தனி சூழல்களை பல நாடுகள் உருவாக்கி, அதனை அரசுக்கு வருவாய் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் திருவிழா மாநிலத்தில் பல ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 20 வரையிலான மூன்று நாள்கள், முசோரி மாவட்டத்தின் பினோவ் நகரில் பறவைகள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், நாடு முழுவதிலும் இருந்து பறவை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
சாத்தியக்கூறுகளை ஆராயும் அரசு:
உத்தரகாண்டில் முதன்முறையாக, பறவைகளைக் காண்பதற்கான (Bird watching) சந்தை மதிப்பீடு செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, மாநிலத்தில் பறவை கண்காணிப்புக்கு எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதுதவிர, எந்தெந்த பகுதிகளில் பறவைகள் காண்பதற்கு ஊக்குவிக்கலாம் என்பதையும் ஆராய முடியும் என்கிறது அரசு. தற்போது, உத்தரகாண்டில் 15 பறவை கண்காணிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக முன்சியாரி, பாவல்கர், தேவல்சாரி, சௌபாடா, பாங்கோட் ஆகியவை அடங்கும்.
பறவைகளின் மருத்துவர்:
உத்தரகாண்ட் வனத்துறையின் தலைமை வனப் பாதுகாவலரான தனஞ்சய் மோகன், ‘பறவைகள் மருத்துவர்’ என அறியப்படுகிறார். இவர் பறவைகள் பாதுகாப்பு குறித்து ஒரு புத்தகத்தையும், 45 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பறவைகளை காணும் சந்தர்ப்பங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து, அதைத் தொழில் வடிவமாக அரசு மாற்றுவதில் இவரின் பங்கு கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பறவைகளை இயற்கையாக ஒரே இடத்தில் பார்ப்பதை ஒரு தொழிலாக நிறுவியுள்ளனர். எனவே, மாநிலத்தில் பறவைகள் காட்சிதருவதை அதிகரிக்க சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தனஞ்சய் மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க |
என்னென்ன செய்யக்கூடாது:
பறவைகளை பார்க்கவரும் பார்வையாளர்களும் சிலவற்றை பின்பற்றுவது அவசியமானது என்கிறார் தனஞ்சய் மோகன். அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.
- பறவைகளின் கூட்டை நெருங்குவது
- அவற்றை ஈர்க்க செயற்கை உணவைக் கொடுப்பது
- சத்தமான இசைகளை ஒலிப்பது
- உரத்த குரல் எழுப்புவது
இவ்வாறான நடவடிக்கைகளைத் தவிர்க்க தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தனஞ்சய் மோகன் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் பறவை பார்வையாளர்களின் எண்ணிக்கை:
இந்தியாவில், 2015 ஆம் ஆண்டில் 45,000 பறவை பார்வையாளர்கள் இருந்தனர் எனவும், இதுவே 2025 ஆம் ஆண்டில் 20 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தலைமை வனப் பாதுகாவலர் தனஞ்சய் மோகன் கூறியுள்ளார். நாட்டில் சுமார் 762 வகையான பறவைகள் உள்ளன. அவற்றில் 268 இனங்கள் உத்தரகாண்டில் காணப்படுகின்றன.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பல்வேறு வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கிறது. கர்நாடகா 267 இனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு வகையான பறவைகள் இருப்பதால், இங்கு பறவைகளை காண்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்கிறது வனத்துறை.