உத்தரப்பிரதேசம்: 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்து, 379 தொகுதிகளுக்குத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதில் குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதும் அடங்கும்.
4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற மக்களவைக்கான 5வது கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசம் - 14 தொகுதிகள், மகாராஷ்டிரா - 13 தொகுதிகள், மேற்கு வங்கம் - 7 தொகுதிகள், பீகார் - 5 தொகுதிகள், ஒடிசா -5 தொகுதிகள், ஜார்கண்ட் - 3 தொகுதிகள் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் என 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியிலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர் மோகன்லால்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகிறனர்.
அதேபோல, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதேபூர் தொகுதியிலும் மத்திய எம்எஸ்எம்இ இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, ஜலான் தொகுதியிலும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ, மோகன்லால்கஞ்ச், ரேபரேலி, அமேதி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, ஃபதேபூர், கௌசாம்பி, பாராபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் நடப்பதோடு லக்னோ கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தமாக 144 வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய உத்தரப் பிரதேச மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 2.68 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் 2024; விழுப்புரத்தில் சிவி சண்முகத்தின் வியூகம் பலிக்குமா? வெற்றியை தக்க வைப்பாரா ரவிக்குமார்?