புதுதில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர், போலி சான்றிதழ்கள் கொடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது ஐஏஏஸ் தேர்வு செயல்பாட்டில் சலுகைகளை பெற அவர் தன்னை உடல் ஊனக் குறைப்பாடு உள்ளவர் எனக் கூறி போலி ஆவணங்களை சமர்பித்திருந்ததாகவும், ஒபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அத்துடன்,யுபிஎஸ்சி தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக, தன்னுடைய அடையாளத்தை மறைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பூஜா கேத்கர் தேர்வு எழுதியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான புகார்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில் அவரை விதர்பா பகுதியின் வாஷிம் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாநில அரசு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வு விதிமுறைகளை மீறியது மற்றும் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி கடந்த ஜூலை 18 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸுக்கு ஜூலை 25 ஆம் பதில் அளித்திருந்தபோதும், முக்கியமான கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க ஏதுவாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி லரை பூஜா கேத்கர் அவகாசம் கோரியிருந்தார்.
ஆனால் அவருக்கு ஜுலை 30 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி வரை யுபிஎஸ்சி அவகாசம் அளித்திருந்தது. இதுவே அவருக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்றும், ஆவணங்களை சமர்பிக்க மேற்கொண்டு காலநீட்டிப்பு அளிக்கப்படாது எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், கூடுதலாக அளிக்கப்பட்டிருந்த ஐந்து நாட்கள் கால அவகாசத்துக்குள் (ஜூலை 30 வரை) பூஜா கேத்கர் தன் தரப்பு விளக்கத்தை அளிக்க தவறிவிட்டார் என்று யுபிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை அவர் அளித்துள்ள ஆவணங்களை தீவிரமாக ஆராய்ந்ததில், பூஜா கேத்கர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பது தெளிவாகி உள்ளது. எனவே, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் எதிர்காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் எந்தவொரு தேர்விலும் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
32 வயதான பூஜா கேத்கரின் தந்தை முன்னாள் அரசுப் பணியாளர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கலின் போது அவர், தனக்கு ஆண்டு வருமானம் 43 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தனது தந்தையின் வருமானத்தை மறைத்து பூஜா கேத்கர் ஓபிசி சான்றிதழ் பெற்றதாகவும், அதை சமர்பித்தே ஐஏஎஸ் பணியில் இணைந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரிக்க பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெல்லி ஐஏஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு; மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்!