ஜான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம், பிரயாகரஜ் (Prayagraj) பகுதியிலிருந்து ஜான்பூருக்கு நேற்று(பிப்.25) நள்ளிரவில் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சமத்கன்ஞ் (Samadhganj) என்னும் பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. அப்போது பேருந்தானது எதிர்பாராத விதமாக டிராக்டர் டிராலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், டிராக்டர் டிராலியிலிருந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் சிகிச்சைப் பலனின்றி அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர்கள் அனைவரும் டிராக்டர் மூலம் அலிஷாபூர் கிராமத்திலிருந்து வேலைக்காக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, கஸ்கஞ்ச் மாவட்டம் படியாலி - தரியாவ்கஞ்ச் சாலையில் பக்தர்கள் கூட்டத்துடன் சென்ற டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த குளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் பயணித்த மக்கள் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 8 குழந்தைகள் மற்றும் 13 பெண்கள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீகார் சாலை விபத்து: சாலையில் பறிபோன 9 உயிர்! எப்படி நடந்தது?