புலந்த்ஷாஹர் : உத்தர பிரதேசத்தில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மூன்றடுக்கு பாலம் கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை கடுமையாக சாடி உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், திட்டங்களின் தரத்தில் சமரசம் செய்து மக்களின் வாழ்க்கையில் பாஜக அரசு விளையாடி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
மேலும், பாலம் இடிந்து விழுந்தது குறித்து தலைமை வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா - புலந்த்ஷஹர் இடையில் கங்கை நதியின் குறுக்கை இந்த பாலம் கட்டுப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றடுக்குகளாக பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்.29) இரவு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 11 மணி வரை பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றதாகவும், அதன் பின் மோசமான வானிலை காரணமாக பாலம் இடிந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. தலைமை வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், பாலம் இடிந்து விழுந்தததற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : மறைந்த முக்தர் அன்சாரியின் இறுதி ஊர்வலம் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உடல் அடக்கம்! - Mukhtar Ansari