ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் நடைபெற்ற ராம லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற கொலைக் குற்றவாளி உட்பட இரு கைதிகள் தப்பியோடிய சம்பவம், சிறை நிர்வாகத்தை கிண்டலுக்காளாக்கியுள்ளது.
ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எல்லா வருடமும் வழக்கமாக நடக்கும் ராம லீலா நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போதும்போல சிறை கைதிகள் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர்.
அந்த வகையில், ரூர்க்கியைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் கோண்டாவை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய குற்றவாளிகள் ''வானர்'' வேடத்தில் நடித்துள்ளனர். இதிகாசத்தின் படி இருவரும் சீதையை தேடி செல்வதாக நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி அகற்றம்...வயிற்றுக்குள் சென்றது எப்படி?
பின்னர் இருவரும் சிறையில் இருந்து தப்பியுள்ளனர். தப்பி சென்றவர்களில் பங்கஜ் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் விசாரணைக் கைதியாகவும் சிறையில் இருந்து வந்தனர். உயர் மட்ட பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தப்பியோடியதை அறிந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஹரித்வார் மாவட்ட சிறையின் மூத்த சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் ஆர்யா கூறுகையில், சிறைச்சாலையில் உயர்பாதுகாப்பு முகாம் கட்டப்பட்டு வருவதால், சிறை வளாகத்திற்குள் ஏணி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏணியை பயன்படுத்திதான் இருவரும் தப்பி சென்றுள்ளனர். மாலையில் வழக்கமாக நடக்கும் கைதிகள் கணக்கெடுப்பின்போது இருவரும் தப்பி இருக்கின்றனர் என அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்