சண்டிகர்: பஞ்சாப், ஸ்ரீ பதேகர் ஷாகிப் அடுத்த நியூ ஸ்ரீஹிந்த் நிலையத்தில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு மற்றொரு சரக்கு ரயில் வந்து கொண்டு இருந்தது. இதில் வேகமாக வந்த ரயில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு நின்று கொண்டு இருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த பணிகள் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் பாசஞர் ரயில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், இரண்டு சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த சரக்கு ரயில்களின் ஓட்டுநர்கள் பாட்டியலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொல்கத்தாவில் இருந்து ஜம்முவுக்கு கோடை கால சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மீது தான் சரக்கு ரயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்பாலாவில் இருந்து லூதியானா நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ நேரத்தில் பயணிகள் ரயில் வேகம் குறைவாக சென்று கொண்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்டு ரயில்கள் விபத்து போன்று இந்த ரயில் விபத்தும் இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பயணிகள் ரயில் சேதமடைந்ததாகவும் இரண்டாவது என்ஜின் பொருத்தப்பட்ட பின் மீண்டும் இயக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், எப்படி விபத்து நிகழ்ந்தது இரண்டு சரக்கு ரயில்கள் ஒரே பாதையில் எப்படி வந்தன உள்ப்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் ரயில் பயணிகள் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாலையில் திகார் சிறையில் ஆஜர்! திடீர் ஆலோசனைக் கூட்டம்! கெஜ்ரிவாலின் திட்டம் என்ன? - Arvind Kejriwal Surrender