பெங்களூரு: கொப்பல் மாவட்டம், குண்டூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியின் பணியாளர் லட்சுமி மற்றும் உதவியாளர் ஷானாஸ் பேகம் ஆகியோர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையை தட்டில் இருந்து திருப்பி எடுத்து சென்ற வீடியோ வைரலானது. இந்த வீடியோ அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கவனத்திற்கு சென்ற நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அங்கன்வாடியில் தினமும் வழங்கப்படும் மதிய உணவுக்காக காத்திருந்த குழந்தைகளின் தட்டுகளில் முட்டையை பரிமாறிய அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு, அவர்கள் தட்டில் இருந்து முட்டைகளை திருப்பி எடுத்துக் கொண்டனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவான நிலையில் வைரலாகியது.
இந்நிலையில், இந்த வீடியோ மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், வீடியோவில் உள்ள இரு அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்தும் இச்சம்பவம் தொடர்பான முழு அறிக்கையை தாக்க செய்ய உத்தரவிட்டுள்ளார்.
'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த துறையை அடிமட்டத்தில் இருந்து உயர்த்திட போராடி வருகிறேன்' என இச்சம்பவம் தொடர்பாக பேசிய அமைச்சர் லட்சுமி, 'சத்தான உணவு மற்றும் தரமான கல்வி வழங்குவதே அங்கன்வாடிகளின் அடிப்படை நோக்கமாகும். ஏழைக் குழந்தைகளுக்கு அநியாயம் நடக்க விடமாட்டோம்' என்றார்
மேலும், 'மாநில மற்றும் மத்திய அரசு ஒரு குழந்தைகளுக்கு 8 ரூபாய் செலுத்துகிறது. கடந்த 9 ஆண்டுகளாக யூனிட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசில் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் தரமான பால் வழங்க வேண்டும் என்பதே நோக்கம். குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் போது, கட்டாயமாக வீடியோ படம் எடுக்க வேண்டும்.
முன்னதாக, இதே போன்ற சம்பவம் நடைபெற்ற போது வீடியோ படப்பிடிப்பை கட்டாயமாக்கப்பட்டது. இதனால், தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் வீடியோ தாலுகா அளவில் இருந்து மாவட்ட அளவில் உள்ள வாட்ஸ்அப் குரூப் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்றார்.
அதனை தொடர்ந்து பேசியவர், கர்நாரகா மாநிலத்தில் 69 ஆயிரம் அங்கன்வாடிகள் நடத்தப்பட்டு வருகிறது. எதாவது ஒரு இடத்தில் இப்படி பட்ட சம்பவம் நடைபெறுவதால் ஒட்டுமொத்த துறையும் சிரமத்திற்கு உள்ளாகிறது.குண்டூர் கிராம அங்கன்வாடி சம்பவம் நேற்று இரவு என் கவனத்திற்கு எடுத்துவரப்பட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் ஈடுப்பட்ட பணியாளரும் உதவியாளரும் ஏற்கனவே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் அவர்கள் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டால் வேலையை விட்டு கட்டாயமாக நீக்கப்படுவார்கள். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்(CDPO) சஸ்பெண்ட் செய்வது குறித்து யோசித்து வருகிறோம்' என அமைசசர் தெரிவித்துள்ளார்.