அடிலாபாத்: தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலம் இந்திரவெல்லி பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் இந்திரவெல்லி மண்டலத்திற்குட்பட்ட பகுதி கட்டேபள்ளி கொலங்குடா. இந்த பகுதியில் 105 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது வெயில் காலம் தொடங்கியதால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்த கிராமத்திற்கும் குடிநீர் தேவைக்காக ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது நிலத்தடி நீர் வற்றி விட்ட நிலையில், வாரம் ஒருமுறை வரும் மிஷன் பகீரதா குடிநீரும் அரை மணி நேரத்திற்கு மேல் வருவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அக்கிராம பழங்குடியின மக்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்காலில், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை உருவாகியுள்ளது.
மிகவும் ஆபத்தான முறையில், சாகசம் செய்வது போல், ஒருவர் செங்குத்தாக உள்ள அந்த கிணற்றில் ஏணியின் உதவியுடன் இறங்கி, மேலே உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வாளியாக தண்ணீரை நிரப்புகின்றனர். ஆபத்தான முறையில் அவ்வாறு எடுக்கப்படும் கிணற்று நீரை குடிப்பதால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தங்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு மிஷன் பகீரத குடிநீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.