டார்ஜிலிங்: மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் அருகே கஞ்சன்ஜங்கா விரைவு பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கன்சன்ஜங்கா விரைவு ரயிலில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் விபத்துகளை தவிர்க்க பொறுத்தப்படும் கவாச் கருவி இல்லாததே ரயில் விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் ஓட்டுநர் சென்றதே விபத்துக்கான காரணம் என்றும் இது முற்றிலும் மனிதத் தவறால் நிகழ்ந்த விபத்து என்றும் மத்திய அரசு தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரயில் விபத்து நிகழ்ந்த ஃபன்சிதேவா பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் கிடந்த ரயில் பெட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய வடகிழக்கு எல்லை ரயில்வே கோட்ட மேலாளர் சுரேந்திர குமார், கடந்த 24 மணி நேரமாக அனைத்து ரயில்வே ஊழியர்களும் மிகுந்த அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு இடைவிடாத மழை பெய்தது, இருப்பினும் அவர்கள் ரயில்வே பாதையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். விபத்து காரணமாக வடகிழக்கு எல்லை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிடவிடப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டன.
முன்னதாக ரயில் விபத்து குறித்தும், பயணிகள் குறித்தும் தெரிந்து கொள்ள ரயில்வே அதிகாரிகள் சிறப்பு உதவி எண்களை வெளியிட்டனர். மேலும், அகர்தலா - சியல்டா பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.