பாட்னா: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் லாலான் சிங், ரயில் விபத்துகள் தொடர்ந்து நடப்பதுதான்,"என்று கூறினார்.
சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையம் வழியே சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் லாலான் சிங், "ரயில் விபத்துகள் தொடர்ந்து நடக்கூடிய ஒன்றுதான். பொதுமக்கள் ரயில் பாதையில் ஏதேனும் பொருட்களை வைப்பதால் தினந்தோறும் இதுபோல நடக்கிறது. விபத்துகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றன. ரயில்வே அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது,"என்றார்.
மத்திய அமைச்சரின் இந்த பேட்டிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ரயில் விபத்துகள் தினந்தோறும் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் உயிரிழக்கின்றனர். மக்கள் காயம் அடைகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள், இது ஒரு சிறிய விபத்துதான் என்று அக்கறையின்றி பதில் அளிக்கின்றனர். இது அவமானகரமானது,"என்று கூறப்பட்டுள்ளது.
The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train.
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024
Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE
இதனிடையே எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பாலாசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கும் வகையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர்.ஆனால், இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேல்மட்டத்தில் பொறுப்புடமை தொடங்கப்பட வேண்டும். இந்த அரசு விழித்துக்கொள்வதற்கு இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.