டெல்லி: தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரணம் கோரி, மத்திய அரசுக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது என்றும் ஜனநாயகம் கேள்விக்குறி ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தான் வாக்கு கேட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தன்னுடைய சாதனைகளை மக்களிடன் கூறி பிரதமர் மோடியால் வாக்கு கேட்க முடியவில்லை என்பதால், பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளை உருவாக்கி, அதன் மூலம் மக்களைக் குழப்பி ஆதாயம் அடைய நினைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கச்சத்தீவு: அதற்காகவே கச்சத்தீவு பிரச்னையை தற்போது கையில் எடுத்துள்ளார். கச்சத்தீவிற்காக தற்போது கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் பல மீனவர்கள் கைது, துப்பாக்கிச் சூடு நடந்ததே, அதற்குக் குரல் கொடுத்தாரா? அல்லது அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளைச் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறதே, அதற்காவது வாய் திறந்தாரா? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் கிடையாது, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இவர் எப்படி கச்சத்தீவு குறித்து பேசலா? என சரமாரியாக விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் கேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாஜக விரைவில் உணரும் என எச்சரிக்கை விடுத்த அவர், சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் பாஜகவிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.
வெள்ள நிவாரணம்: பாஜகவின் அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நீதிமன்றத்தை நாடி சென்று கொண்டிருக்கின்றன. சட்டத்தின் மீது மட்டுமே தற்போது நம்பிக்கை உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. ஆகையால், வெள்ள நிவாரணம் கேட்டு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் நமக்கு ஒரு பைசா கூட தரவில்லை. ஆகையால், மத்திய அரசைக் கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ள நிவாரணம் தரவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டை வலியுறுத்தி, இன்று (புதன்கிழமை) மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், "கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஆகவே, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய ரூ. 19,692.69 கோடி நிவாரணத் தொகை விடுவிக்குமாறு கோரியிருந்தோம்.
அதேபோல, கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மிகக் கனமழை பெய்தது. அந்த மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய, நிவாரணமாக ரூ.18,214.52 கோடியை விடுவிக்குமாறும், மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் கோரியிருந்தோம். ஆனால், தமிழக மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரும், மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு கோரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்" என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகாந்த் செந்தில் மத்திய அமைச்சராவது உறுதி: திருவள்ளூரில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு - Lok Sabha Elections 2024