போபால்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.26) 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, அசாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாலை 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 68.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மகராஷ்டிராவில் 43.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள 3 மணி நிலவரப்படி அசாமில் 60.32%, பீகார் 44.24%, சத்தீஸ்கர் 63.32%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 57.76%, கர்நாடகா 50.93%, கேரளா 51.64%, மத்திய பிரதேசம் 46.50% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும் மகாராஷ்டிரா 43.01%, மணிப்பூர் 68.48%, ராஜஸ்தான் 50.27%, திரிபுரா 68.92%, உத்தரப் பிரதேசம் 44.13%, மேற்கு வங்காளம் 60.60% என 3 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் 6 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தில் 46.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாக ஹோசங்கபாத்தில் 55.79 சதவீத வாக்குகளும், ரேவா தொகுதியில் குறைந்தபட்சமாக 37.55 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு நிறைவு பெற இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், இனி அதிகளவிலான மக்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: திரிபுராவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! மகராஷ்டிராவில் மந்தம்! - Lok Sabha Election 2024