பெல்லாரி: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஜிந்தால் ஸ்டீல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு ஸ்டீல் உலோகத்தை குளிர்விப்பதற்கு ஏதுவாக ராட்சத தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பைப்லைனை பராமரிக்கும் பணியில் சென்னையை சேர்ந்த மகாதேவன் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்கு வந்த நீரின் வேகம் அதிகரித்த நிலையில், மூவரும் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிரிழந்தவர்கள் புவனஹள்ளி பகுதியைச் சேரந்த ஜெட்டபா, பெங்களூரை சேர்ந்த சுஷாந்த் மற்றும் சென்னையை சேர்ந்த மகாதேவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் ஸ்டீல் தொழிற்சாலையின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சென்னையை சேர்ந்த இளைஞர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாலத்தீவில் இருந்து முற்றிலும் வெளியேறிய இந்திய ராணுவம்... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Indian Soldier Return From Maldives