டெல்லி: குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக இருந்த நிலையில் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்படமால் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், 2019 முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர. இந்நிலையில் சிஏஏ அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கல்நது கொண்ட சாந்தனு தாகூர், குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு வாரத்திற்குள் மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பேசினார். இந்நிலையில், ஒரு வாரத்திற்குள் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கென குறிப்பிட்ட கால அளவு வகுக்கப்படவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார். அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற துணைச் சட்டப்பிரிவு குழு கால அவகாசம் வழங்கியது.
கடந்த ஜனவரி 9ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான அவசரம் குறித்து கேள்வி எழுந்து உள்ளது. அதேநேரம் மத்திய அமைச்சரின் கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூரின் பேச்சுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்ய மத்திய அரசு சிஏஏ பிரச்சினையை கொண்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: 7 நாட்களில் நாடு முழுவதும் சிஏஏ அமல் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! சாத்தியமாகுமா?