ஹைதராபாத்: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கடும் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா தேர்தல்: தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரையில் அங்குள்ள அதிலாபாத், காரிமங்கர், ஜாஹிர்பாத், நாசம்பாத் உள்பட 17 நாடாளுமன்ற மக்களவை தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த மே.13 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 64.93 வாக்குகள் பதிவாகி இருந்தன.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஆர்எஸ் 9 இடங்களிலும், பாஜக 4 இடங்களில், காங்கிரஸ் 3 இடங்களில் ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்த முறையும் இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பிஆர்எஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருவதைக் காண முடிகிறது.
பாஜக-காங்கிரஸ் இழுபறி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 8 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதில் அதிலாபாத், செவெல்லா, கரீம்நகர், மஹ்பூப் நகர், மல்காஜ்கிரி, மேடக் மற்றும் நிஜாமாபாத், செகந்திராபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் பாஜக முன்னில்லை வகிக்கின்றது.
அதேபோல் புவனகிரி, கம்மம், நாகர் கர்னூல், மஹபூபாபாத், நல்கொண்டா, பெத்தப்பள்ளி மற்றும் வாரங்கல், ஜாஹிர்பாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்த 16 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் இந்த தொகுதியில் வெற்றி பெற போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதேபோல் 9 ஆண்டுகளாக தெலுங்கானவை ஆட்சி செய்து வந்த பாரதிய ராஷ்டிர சமிதி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அசாதுதீன் ஒவைசி முன்னிலை: ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஒவைசி, பாஜக வேட்பாளர் மாதவி லதா மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பாக முகமது வலியுலா சமீர் மற்றும் பிஆர்எஸ் வேட்பாளர் கடம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில் மதியம் 12 மணி நிலவரப்படி அசாதுதீன் ஒவைசி 2 லட்சத்து 68 ஆயிரத்து 616 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாதவி லதா 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கிறார் சந்திரபாபு நாயுடு.. பாஜக கூட்டணி அமோகம்! - AP assembly election results 2024