டெல்லி : கடந்த மார்ச் 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவது அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வகையில் உள்ளது என்றும் சடத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தவிர 200க்கும் மேற்பட்ட மனுக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஏறத்தாழ 237 மனுக்குள் இன்று (மார்ச். 19) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களுக்கு 3 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டனர். ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் இந்த மனுக்குள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும், ஏப்ரல் 9ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மதம் சார்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடையும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின், பெளத்தம், பாரசீகம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், 2019ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மக்கள் புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்க்காதது மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக புலம் பெயரும் மக்களுக்கு குடியுரிமை வழங்காததை குறித்து குறிப்பிடப்படாததால் தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகன பேரணி!