டெல்லி : திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, 20 லட்ச லஞ்சம் வாங்கியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அங்கித் திவாரியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி இரண்டு முறை மனுத் தாக்கல் செய்து இருந்தார். அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
முதலில் இந்த மனு விவேக்குமார் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீனை வழங்கி உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் உரிய அனுமதி பெறாமல் செல்லக் கூடாது, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : தாய் ரூ.5 ஆயிரம் தராததால் ஆத்திரம்.. 2 குழந்தைகளை கொன்ற கொடூரம்! போலீசார் என்கவுன்டர் - என்ன நடந்தது?