டெல்லி: 2022-இல் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்ற பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் விதமாக இழிவாக கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி யூடியூபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகனின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, சாட்டை துரை முருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் எம்.யோகேஷ் கண்ணா சாட்டை துரைமுருகன் சார்பில் ஆஜராகினார். இதையடுத்து, “இவ்வழக்கைப் போல, தேர்தல் சமயத்தில் யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எல்லோரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால், அப்படி எத்தனை பேர் சிறை செல்ல நேரிடும் என எண்ணிப் பாருங்கள். இவ்விவகாரத்தில் எது தவறான குற்றச்சாட்டு என்பதை எதனடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது” என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வியெழுப்பப்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்ற நிலையில், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும், எதிர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு அவர் ஜாமீன் பெற்ற பிறகு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ள இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 'இவ்விவகாரத்தில் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதற்கான காரணம் ஏதும் இல்லை' என்று கூறினர்.
நவம்பர், 2021-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் ஜூன், 2022-இல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இவர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறி செயல்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாகவே முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்திருப்பதாகவும் காரணங்கள் மேற்கொள் காட்டப்பட்டு, அவரது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து சாட்டை துரைமுருகன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விவகாரத்தில் பொருத்தமான முறையில் மீண்டும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனிடம் 1,500 வீடியோக்கள் பறிமுதல்..விடுதலைப் புலிகள் தொடர்பான வீடியோவா? - என்.ஐ.ஏ விசாரணை