டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023 ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
இவ்வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட மணீஷ் சிசோடியா மீது சிபிஐ அதிகாரிகளும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு கடந்த மே 21 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த ஜாமீன் மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசராணைக்கு வந்தது.
அப்போது விசாரணை அமைப்புகள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என்றும் ஏற்கனவே தொலைபேசி பதிவுகளை அழித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார்.
மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, சிசோடியா ஏற்கனவே பதினேழு மாதங்கள் சிறையில் இருந்து வருகிறார். இது வழக்கில் குறைந்தபட்ச தண்டனையில் பாதி காலமாகும். புதிய மதுபான கொள்கையானது அப்போதைய பல அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மணீஷ் சிசோடியாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை பாதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: "தமிழக மீனவர்களை நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா?"- நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரி கேள்வி!