டெல்லி: டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரோஸ் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 4 அன்று உத்தரவிட்டிருந்தது.
இதனை அடுத்து, காலக்கெடுவை நீட்டிக்குமாறு ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரன் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தபோது, ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி ரோஸ் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு அலுவலகம் அமைக்க டெல்லியில் இடம் தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்கு தொடர்ந்தது.
அதனை ஏற்ற நீதிமன்றம் அங்கீகரிக்கப்பட்ட மற்ற கட்சிகளுக்கு இடம் தந்தது போல, ஆம் ஆத்மிக்கும் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திர அமைச்சரவையில் இணையுமா ஜனசேனா? உற்றுநோக்கும் பவன் கல்யாண்!