டெல்லி: சென்னையில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் டெங்கு, கொசு, கரோனா போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு வட மாநிலங்களில் இருந்தும் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். மேலும் பலர் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். கர்நாடகா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் தன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி ஆஜராகி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க கோரினார்.
அதற்கு நீதிபதி தத்தா, “நீங்கள் சட்டப்பிரிவு 19(1)(a) படி சுதந்திரமாக பேசுவதற்கான உரிமையை தவறாகப் பயன்படுத்தி உள்ளீர்கள். சட்டப்பிரிவு 25ஐ மீறியுள்ளீர்கள் தற்போது சட்டப்பிரிவு 32யை பயன்படுத்துகிறீர்கள். ஒரு மாநிலத்தின் அமைச்சரான நீங்கள் பேசும் போது பின் விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும். நீங்கள் பேசியதன் பின்விளைவுகள் குறித்து உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கண்ணா, சிங்வியை உயர் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள கூறினார். அதற்கு சிங்வி, “வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதால் ஒவ்வொரு நீதிமன்றமாக செல வேண்டி இருக்கும். சனதான தர்மம் தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என கூறவில்லை. அனைத்து வழக்குகளையும் பொதுவாக ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, முகமது பைஜூர், பாஜகவின் நுபுர் சர்மா ஆகியோர் மீது பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஒரே வழக்காக விசாரித்து இருந்தது. அதுபோல் சனாதன தர்மம் தொடர்பான இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சிங்வி கோரினார்.
வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியது. பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 15) ஒத்திவைத்து உத்தரவிட்டது.