மு.கருணாநிதி - மு.க.ஸ்டாலின்: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், கடந்த 2009 மே 29ம் தேதியன்று துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரகாஷ் சிங் பாதல் - சுக்பீர் சிங் பாதல்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் சார்பில், கடந்த 2009 ஜனவரி 21ல், முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராக பதவியேற்றார். தந்தை - மகன் ஆகியோர் அரசின் உயர் பதவிகளை அலங்கரித்தது இந்தியாவில் இதுவே முதல் நிகழ்வாகும்.
சந்திரபாபு நாயுடு - நாரா லோகேஷ்: ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் கடந்த 2014-2019 வரை அமைச்சரவையில் ஒன்றாக அங்கம் வகித்தனர். இந்த காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை, பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நாரா லோகேஷ் இருந்துள்ளார். தற்போதும் முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், மனித வளத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நாரா லோகேஷும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கே.சந்திரசேகர் ராவ் - கே.டி.ராமா ராவ்: தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரு முறை தெலங்கானா ராஷ்டிர சமிதி (தற்போது பாரத் ராஷ்டிர சமிதி) ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் முதல்வராகவும், அவரது மகன் கே.டி.ராமா ராவ் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் தாக்கரே - ஆதித்யா தாக்கரே: மகாராஷ்டிரா மாநிலமும் கடந்த 2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை தந்தை - மகன் ஆட்சியை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் ஒன்றுபட்ட சிவசேனா சார்பில் கடந்த 2019 நவம்பர் 28ல், மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே சுற்றுலா, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.