ஹைதராபாத்: இலங்கை நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழுவினர் நாளை மறுதினம் (ஜூலை 15) இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தின் அழைப்பின் பெயரிலேயே அமைச்சர் இந்தியா பயணிக்க உள்ளனர்.
15 ஆம் தேதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 19 ஆம் தேதி நாடு திரும்ப உள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன், நெக்டா நிறுவனத்தின் இலங்கை வடக்கு மாகாண இணைப்பாளர் நிருபராஜ், நாரா நிறுவனப் பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் பயணிக்க உள்ளனர்.
இந்த வருகையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடல் தொழிலாளர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினரால் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக சிறை பிடிக்கப்படுகின்றனர்.
இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் அழைப்பு: முன்னதாக இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "இந்திய மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்வதற்காக டெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும்; இதனால், தடைபட்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடல் தொழிலாளர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கு அமைச்சர் இணக்கம் ஏற்படும்" என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? - Douglas Devanandas
அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நேரத்தில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த சந்திப்பின் மூலம் நீண்ட ஆண்டுகளாக நிலவிவரும் இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: 13 மீனவர்கள் சிறைபிடிப்பு; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்! - CM Stalin Letter to Jaishankar