கொழும்பு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, காங்கிரஸும், திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம். இருநாட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட கச்சத்தீவை திரும்ப ஒப்படைப்பது சாத்தியமற்றது. கச்சத்தீவை மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை மீது எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கச்சத்தீவை விட்டு தர மாட்டோம் என இலங்கை தமிழ் அரசியல்வாதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சர்ச்சை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், “இந்தியாவில் இது தேர்தல் நேரம். ஆகையினால் கச்சத்தீவு குறித்த இந்த கூற்றுக்கள் வழக்கமானவையே. கச்சத்தீவு பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் நுழையக்கூடாது, வளம் நிறைந்த அப்பகுதியில் இலங்கை எந்த உரிமையும் கோரக்கூடாது என்ற நோக்கில் இந்தியா செயல்படுகிறது.
1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி இந்தியா, இலங்கை என இரு நாட்டு மீனவர்களும் இருநாட்டு கடற்பரப்பில் மீன் பிடிக்க முடியும். ஆனால் அதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் 1976ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, அயல் கடல்பரப்பில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி கடல் பகுதிக்கு கீழே மேற்கு கரை (West Bank) என்னும் பகுதி உள்ளது.
இது கடல் வளங்கள் நிறைந்த மிகப்பெரிய பகுதியாகும். இப்பகுதி கச்சத்தீவை விட 80 மடங்கு பெரியது. 1976ஆம் ஆண்டு போடப்பட்ட திருத்த ஒப்பந்தத்தில், இந்தியா இப்பகுதியை பாதுகாத்துக்கொண்டது” என்று கூறினார். தற்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தலைமை தாங்கும் முன்னாள் தமிழ் போராளியான தேவானந்தா, 1994ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கச்சத்தீவு சர்ச்சை தொடர்பான கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், கச்சத்தீவு தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியிலும், குஜராத்திலும் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 19 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில் விடுதலை! - Indian Fishermens Released