டெல்லி: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிஐஎஸ்எப் துணை உதவி காவல் ஆய்வாளரை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் ஊழியரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அனுராதா ராணி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உணவு விநியோக பிரிவின் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் உள் நுழைவு வாயிலில் உணவு விநியோக பணிகளுக்காக பெண் சென்று உள்ளார். அப்போது அவரை மறித்த துணை உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத், பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அனுராதா ராணியிடம் நுழைவு வாயிலை கடந்து செல்வதற்கு தேவையான அனுமதிச் சீட்டு இல்லை எனக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பெண் ஊழியர், துணை உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத்தின் கன்னத்தில் பளார் என அறைந்தாக சொல்லப்படுகிறது.
STORY | SpiceJet employee slaps CISF man in argument over security check at Jaipur airport, arrested
— Press Trust of India (@PTI_News) July 11, 2024
READ: https://t.co/snXzE4ANsx
VIDEO:
(Source: Third Party) pic.twitter.com/MdfwNVKtDA
இந்த சம்பவம் தொடர்பாக அனுராதா ராணியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து பேசிய மூத்த சிஐஎஸ்எப் அதிகாரி, ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அனுராதா ராணி உள்பட எந்த விமான நிறுவன ஊழியரும் பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.
சம்பவ இடத்தில் பெண் சிஐஎஎஸ்எப் ஊழியர் இல்லாத காரணத்தால் கிரிராஜ் பிரசாத் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டி வந்ததாகவும், இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் ஊழியர், கிரிராஜ் பிரசாத்தை தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில், பெண் ஊழியரை பாலியல் ரீதியிலான சங்கடத்திற்கு சிஐஎஸ்எப் அதிகாரி உட்படுத்தியதாகவும், அதன் காரணமாக அவர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான பாதுகாப்பு ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு ஆவணம் இருந்த போது பெண் ஊழியர் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதாகவும், தகாத வார்த்தையில் பெண் ஊழியரிடம் பேசிய சிஐஎஸ்எப் வீரர், பணி முடிந்த பின்னர் தனியாக வீட்டில் வந்து சந்திக்குமாறு தெரிவித்ததாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசில் புகார் அளித்து, சிஐஎஸ்எப் வீரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், பெண் ஊழியர்க்கு நிறுவனம் தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்.. ஆனாலும் வெளியே வருவதில் சிக்கல்! - JAFFER SADIQ BAIL