பெங்களூர்: கர்நாடக ஹசன் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அண்மையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய சதீஷ் பாபன்னா என்பவர் தனது தாயைக் கடத்தியதாக மைசூரு கிருஷ்ண ராஜ நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இளைஞர் அளித்த புகாரில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றியதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியதாகவும் மேலும், ரேவண்ணா தொடர்புடைய சதீஷ் பாபன்னா என்பவர் தங்களது வீட்டுக்கு வந்து ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடாது என மிரட்டியதாகவும், தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 9 மணிக்கு மீண்டும் வந்த சதீஷ் பாபன்னா, "உனது அம்மா பிடிபட்டால் சிக்கல் ஏற்படக் கூடும், நீங்கள் அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டி வரும். உங்களை அழைத்துச் செல்ல ரேவண்ணா கூறியுள்ளார்" என்று கூறி தனது தாயாரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்" என இளைஞர் தெரிவித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, கிருஷ்ண ராஜ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே அபாச வீடியோ விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பெண் கடத்தப்பட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எச்.டி.ரேவண்ணா தரப்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், முன்ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.டி.ரேவண்ணா தரப்பில் கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் கால அவகாசம் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணை மதியம் 3.00 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து, மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைப் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து எச்.டி.ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சகுனி வேடம் போட்ட கலைஞன் மேடையிலேயே சரிந்த சோகம்.. வைரல் வீடியோ! - Karnataka Artist Dies On Stage