திண்டொரி (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசம் மாநிலம் திண்டொரி மாவட்டத்தில் பட்ஜர் காட் பகுதியில் பிக்கப் ரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (பிப்.28) இரவு நடந்த இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து உள்ளனர் என திண்டொரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா தெரிவித்திருந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில், “வளைகாப்பு நிகழ்வு ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஷபுரா சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அலுவகம் தரப்பில் X சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், “திண்டொரி மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் குடும்பத்தினருக்கு மன வலிமை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், கேபினட் அமைச்சர் சம்பைட் உய்கே நேரில் பார்வையிடுவார் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “மத்திய பிரதேசம் திண்டொரியில் நடந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டொரி விபத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஷபுரா சுகாதார மையத்தில் (shahpura community health centre) நேரில் வந்த பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் துர்வே, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜார்கண்டில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து - 2 பேர் சடலம் மீட்பு!